நினைவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நினைவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 8 ஜூலை, 2017

நம்பிக்கையில் நான் .....

உனக்கென்று
எழுதிய
கடவுளின் பட்டியலில்,
என் பெயரும்.....

எப்படி என்றே 
தெரியாமல் ,
காலம் காட்டிய 
திசையில் 
பயணித்து விட்டோம் .....

திரும்பிப்பார்க்கையில் 
இன்னும் இரு 
உயிர்கள் ,
நம் வாழ்க்கையில் .....

ஏனென்று தெரியாத 
சில மாற்றங்கள் ....
வாழ்வை மாற்றிய 
சில தருணங்கள் ....
இடை இடையே தோன்றிய 
ஊடல்கள் ...
மீண்டும் கடக்க இயலா 
சில நினைவுகள் ....

வருடங்கள் கடந்தும் 
வாழ்வில் மாற்றமில்லை ....
மாறாத அன்போடு ,
மனங்களிரண்டும் 
கரம் கோர்த்து 
காத்திருப்போம் ...

இன்றளவும் எனக்குள் 
ஒரு நம்பிக்கை ...
எத்துணை துயரிலும் 
என்னுடன் நீ 
வருவாய் என 
நம்பிக்கையில் நான் .....

ஞாயிறு, 29 நவம்பர், 2015

மீண்டும் வேண்டும் நீ ....


தொலைந்து போன கனவுகள் தேடிப் 
பறக்கும் பட்டாம்பூச்சியைப் போல ,
உன் நினைவுகள் தேடிப் பறப்பேன் 
வானமெங்கும் !!!

என் குறைகளெல்லாம் முதலாய் வந்து ,
எடுத்துச் சொல்ல 
எனக்குமீண்டும் வேண்டும் 
நீ !!!


எங்கோ ஒலிக்கும் பாடல் தேடி ,
என் செவியை நிறைக்க 
எனக்கு மீண்டும் வேண்டும் 
நீ !!!!!

துயிலுறங்கும் நேரம் கூட,
என் துயரம் துடைக்க 
எனக்கு மீண்டும் வேண்டும் 
நீ !!!!

நடந்ததெல்லாம் கனவாய்ப்
போக !
நினைவுகள் மட்டும் நிஜமாய் ஆக 
எனக்கு மீண்டும் வேண்டும் 
நீ !!!!

 இவ்வரிகள் எழுதும் இந்த வேளை ,
என் கண்ணில் முட்டும் 
கண்ணீர் துடைக்க 
எனக்கு மீண்டும் வேண்டும் 
நீ !!!!


எதிலெதிலோ நினைவாய் வந்தாய் நீ !
என்றென்றும் நிஜமாய் 
எனக்கு மீண்டும் வேண்டும் 
நீ !!!!

வருவாயா ? கரம் தருவாயா ?
என் எதிர்பார்த்து ஏங்கும் ,
எனக்கு மீண்டும் வேண்டும் நீ !!!!






திங்கள், 3 நவம்பர், 2014

துள்ளித் திரிந்த பால்யப்பருவம்


இன்ச் இன்ச்சாய் ரசித்த பச்சுமிட்டாய்,
பாப்கார்ன் வந்தும் மறக்கவில்லை ....

திணறும் புன்னகை மறைத்து ,
போட்டோவுக்கு   கொடுத்த அட்டென்ஷன் போஸ் போல
'செல்பி' போட்டோ அழகில்லை ......

மாட்டு வண்டி "பேக் சீட்" போல
சொகுசு பஸ்ஸின் ஏசி பயணம் இனிக்கவில்லை ....

ஒத்த பைசா மிட்டாயின் 'காக்காய் கடி' நட்பைப் போல
பீசா ,பர்கர் 'ட்ரீட்'டில் நெருக்கமில்லை ....

குழாயடியில் 'க்யூ' நின்று குடித்த குடிநீர் போல ,
கூலிங் மினரல் வாட்டர் தாகம் தீர்ப்பதில்லை ....

தென்னை மட்டை தந்த கிரிக்கெட் இன்பம்
இன்று 20- 20 கொடுக்கவில்லை ....

முடிந்தவரை துரத்தி ரசித்த அத்திப்பூ
அம்பாஸிடர்  போல ,
ஆடி காரையும்  ரசிக்கவில்லை ....

ஒரே ஒரு கைப்பிடி
அச்சு வெல்லம்,பொரியரிசி
தத்த ருசி போல
லேஸ் ,குர்குரே ருசிக்கவில்லை ....

இளமையும் ,முதுமையும்
கடந்தே  போனாலும் ,
பால்யப்பருவம் என்றும்
மறப்பதற்கில்லை ...
அந்த இனிமைகள் மீண்டும்
வருவதற்கில்லை ....








வெள்ளி, 31 அக்டோபர், 2014

மணப்பெண்ணின் சொல்ல இயலா சோகங்கள் ...




அறையில் சிதறிய புத்தகங்களும் ,
அம்மாவின் அர்ச்சனைகளும் ,

அதுவரை செல்லாத  சமையலறையும் ,
அம்மாவின் கைப்பக்குவமும் ,


வீதிமுனைப் பிள்ளையாரின்
பிரார்த்தனை பெட்டிஷன்களும்,


பரிசாய்ப் பெற்ற பதக்கங்களும் ,
பால்கனிப் பூக்களும் ,

செல்ல நாயின் சிணுங்கள்களும் ,
சிறுவயது கிறுக்கல்கள் சுமந்த சுவர்களும் ,

எல்லாம் சேர்ந்து  ,
இதயம் பிளந்து ,
கண்ணீர்  உதிர்த்து ,
பாரம் சுமந்து ,

புன்னகை போர்த்தி
புகுந்த வீடு
நுழைகிறாள்
புதுப்பெண்ணாக  ...


சனி, 23 ஆகஸ்ட், 2014

அன்பே ... அன்பே...



மெல்லச் சொட்டும் 
மழைத்துளியை 
கையில் ஏந்தி ,
பொத்திக் கொள்வேன் ....
அதை 
என் முத்தம் தேடும் ,
உன் தேகக்கீற்றில் 
உரசச் செய்வேன் .....

மிதந்து செல்லும் 
மேகம் திரட்டி ,
மேனியெங்கும் 
உருட்டி விடுவேன் .....

என் வெட்கமெல்லாம் 
மூட்டைகட்டி 
ஆற்றில் விடுவேன் ....
அதை 
அப்பப்போ அள்ளிப்பருகி ,
கன்னம் சிவப்பேன் ....

உன் பெயரைச்சுமந்த 
கவிதைகளை 
காற்றில் ,
பறக்கச் செய்வேன் ....
அதை 
சுவாசித்து சுவாசித்தே 
மூச்சடைத்துப்போவேன் ...

அன்பே ,
உனக்கே உனக்காய் 
சேர்த்து வைத்த 
ஆசையெல்லாம் ,
கருகிப் போனதே ....
என் 
காதல் கீதம் 
ஏனோ இன்று 
சோக கீதம் ஆனதே ...
கலைந்து போனதே ....
கனவாய் ஆனதே....
அன்பே ...
மீண்டும் வா ....
என்னை மீட்க வா ....

ஞாயிறு, 2 பிப்ரவரி, 2014

முத்தங்கள்

உன்னைப்
பிரிந்த
பதட்டத்தில்,
எனது
முத்தங்கள்
எல்லாம்
கொட்டி விட்டேன்
உனது
புகைப்படத்தில் ...

வியாழன், 23 ஜனவரி, 2014

நானும் ,எனது பேனாக்களும் ....

முன்பெல்லாம், பேனாக்கள் என்
கையில் கிடைக்கும்போது
அது அங்கங்கு என் பெயரை எழுதி
தன் அடையாளத்தை
விட்டுச் செல்லும் .....

இப்போதெல்லாம், பேனாக்கள்
மளிகை சாமான்களும்,
அப்பப்போ சில கவிதைகளும்,
எழுதி தன் பரிணாமத்தை
விளக்கிச் செல்கின்றன ...

ஆம்...
பேனாவைப்போல்
என் பெயரும், அந்த
பழைய புத்தகங்களில் ,
சப்தமில்லாமல்
சிதறிக் கிடக்கின்றன ....


வெள்ளி, 17 ஜனவரி, 2014

எங்களின் (பெண்களின் ) நட்பு

அன்றொருநாள்
அவளைக்
கண்டேன் ...

பள்ளிகூட
தோழியவள்...
பாசமிகு
பாவையவள் ...

கண்ட நொடி
கண்களில்
மிளிர்ந்தன
மின்னல்கள் ....

சிலநொடி
சிரிப்புகள் ...
பலநொடி
ஏக்கங்கள் ...

கலைந்து விட்ட
கனவுகள் ..

கிழிந்து விட்ட
கடிதங்கள் ...

மறந்து விட்ட
நினைவுகள் ...

மீண்டும்
முளைத்தன ...
முன்னே வந்து
சிரித்தன ...

அடடா ...
அதெல்லாம்
சில நொடி !
அழைப்புமணி
ஒலித்து
அலைபேசி அழைக்க ...

அச்சச்சோ !
நேரமாச்சு...
பதைத்தன கொஞ்சம்  ..
துடித்தது நெஞ்சம் ...

கடைசியில் கடக்கையில் ,
திரும்பினோம்
இருவரும் ...
கண்ணீரில் கனத்த
கண்களுடன் ...

பெண்களின் நட்பில்
பரிதாபம்தான்
என்றும்
மிச்சம் ...


நினைவுகள் ...


உனக்கு 
பிடித்த
பாடலொன்று 
காற்றலையில் 
தவழ்ந்து செல்ல 
என் 
நினைவெல்லாம் 
நீ .....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...