கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 13 மார்ச், 2025

ஏக்கம் கவிதை

 


ஏக்கங்களுக்கு 

எப்போதும் 

என் மீதான 

பிரியங்கள்  

அதிகம்… 

விருப்பப்பட்டியலில் நிறைந்து கிடக்கும், கனவுகளை ,

ஒரு வெற்றுப்பார்வை மட்டும் வீசி ,

மனத்திரையில் மட்டும் கண்டு,  ஏக்கங்களோடு கடந்துபோகும் 

மன நிலையை மறைக்க இரும்புத்திரை கொண்டு  தினம்தினம்  நடத்தும் போராட்டங்களை  என்னவென்று சொல்ல…

கனவுகள் கரங்களில் கிடைக்கும் காலம் வரை காத்திருக்கும் இந்த கனவுக்கண்கள்…



திங்கள், 10 மார்ச், 2025

தனிமையும் நானும்..



இந்த விரல்களுக்கிடையே ஒரு 

கவிதை ஒன்று கசங்கிக்கிடக்கிறது.. 


அதை வெளிப்படுத்த தினமும் திணறிக்கொண்டிருக்கிறது…


அது தன் எண்ணங்களை 

எல்லாம் கோலங்களாய் 

வடித்துக்கொண்டிருக்கிறது…


அவ்வப்போது , மேகவெளியில் 

மிதந்து நட்சத்திரங்களோடு 

கதைபேசிக்கொண்டிருக்கும்… 


தன்னைத்தானே தனிமை வயப்படுத்தி, ஆற்றாமையில் அவ்வப்போது அழுது கொண்டிருக்கும்…

தனக்கான தேடலை தொடர்ந்தபடியே… 

 

திங்கள், 2 ஏப்ரல், 2018

நட்சத்திர நினைவுகள்

உன்னை 
நினைக்கும் போதெல்லாம் ,
நட்சத்திரம் ஒன்றை 
விண்ணுக்கு 
பரிசளிக்கிறேன்   ....
உன்னை 
எத்தனை முறை
 நினைத்தேன் என 
சற்று
 வானத்தை வந்து பாரடா அன்பே !!!!

-சங்கீதா செந்தில் 

வியாழன், 21 டிசம்பர், 2017

நீ ....

என் கவிதைக்கு 
கிடைத்த, 
முதல் வார்த்தை 
நீ .....

என் பெண்மைக்கு 
கிடைத்த முதல் 
வெட்கம் 
நீ ....

என் சிரிப்புக்கு 
கிடைத்த 
ஒலி வெள்ளம் 
நீ ...

என் பார்வைக்கு 
மட்டும் 
எல்லாமுமாய் 
நீ ....
    
- சங்கீதா செந்தில் 



திங்கள், 23 அக்டோபர், 2017

குழந்தைகளின் குழந்தைகள்-பொம்மைகள்

மனிதர்களை பொம்மைகளாக
பாவிக்கும் மனிதர்களுக்கு
மத்தியில்,
பொம்மைகளை மனிதர்களாக
பாவிக்கும் குழந்தைகள்
வரப்பிரசாதங்கள்......

வியாழன், 7 செப்டம்பர், 2017

அடுப்பங்கறை அத்தியாயங்கள்....























கருகிப்போன தோசைகளை 
தனக்காய் கொண்டு
அழகாய் வந்த தோசைகளை
அவருக்கு அளிப்பதில்
தொடங்குகிறது ...
பெரும்பாலும் பெண்களின்
அடுப்பங்கறை அத்தியாயங்களும்
அன்பின் பரிமாற்றங்களும்....
-சங்கீதா செந்தில்

ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2017

அடுப்பங்கறை பிரம்மாக்கள்


அடுக்களைக்குள்
அழிந்துபோன
பிரம்மாக்களை
நீங்கள் என்றாவது அறிந்ததுண்டா?
கவிஞராய் ,நிபுணராய்,நாட்டியராய் ,ஓவியராய்,வீராங்கனையாய் ...
இன்னும் எத்தனையோ
சாதனைகள் படைக்கும்
பிரம்மாக்களை
இழந்து விட்டோமென
நீங்கள் வருந்தியதுண்டா?

கயல்விழியும் ,மெல்லிடையும்,கார்கூந்தலும்
அடையாளமென வகைப்படுத்தி விட்டீர்!
மறைக்கப்பட்ட எங்களின் அடையாளங்கள் இன்னும் எத்தனையோ?

உண்மையை உரக்கச் சொன்னால்,இங்கே
செவிசாய்க்க சிலர் இருப்பர் இதோ உங்களைப்போல !

கண்டுவைத்த
கனவுகளை எண்ணி ,
கசிந்துருகும்,
கன்னிகளைப்பற்றி
என்றாவது வியந்ததுண்டா?

என்னைப்போல,
ஆதங்கம் உங்களுக்கும்
இருக்குமென்றால்,
ஆதரியுங்கள்!
சில அடுப்பங்கரை
பிரம்மாக்களை......
-சங்கீதா செந்தில்

சனி, 8 ஜூலை, 2017

நம்பிக்கையில் நான் .....

உனக்கென்று
எழுதிய
கடவுளின் பட்டியலில்,
என் பெயரும்.....

எப்படி என்றே 
தெரியாமல் ,
காலம் காட்டிய 
திசையில் 
பயணித்து விட்டோம் .....

திரும்பிப்பார்க்கையில் 
இன்னும் இரு 
உயிர்கள் ,
நம் வாழ்க்கையில் .....

ஏனென்று தெரியாத 
சில மாற்றங்கள் ....
வாழ்வை மாற்றிய 
சில தருணங்கள் ....
இடை இடையே தோன்றிய 
ஊடல்கள் ...
மீண்டும் கடக்க இயலா 
சில நினைவுகள் ....

வருடங்கள் கடந்தும் 
வாழ்வில் மாற்றமில்லை ....
மாறாத அன்போடு ,
மனங்களிரண்டும் 
கரம் கோர்த்து 
காத்திருப்போம் ...

இன்றளவும் எனக்குள் 
ஒரு நம்பிக்கை ...
எத்துணை துயரிலும் 
என்னுடன் நீ 
வருவாய் என 
நம்பிக்கையில் நான் .....

வியாழன், 26 ஜனவரி, 2017

உன்னையே எண்ணி இன்னமும் நான் ...

என் பாதைகள் எங்கும்
உன் பாதங்கள் தேடி ,
உன்னையே எண்ணி
இன்னமும் நான்...

உன் ஒற்றைச்சொல் கேட்க
ஓடிவரும் மழலைபோல,
உன்னையே எண்ணி
இன்னமும் நான் ....

ஆதிமுதல் அந்தம் வரை
எல்லமாகிப்போன,
உன்னையே எண்ணி
இன்னமும் நான் ...

போகும் இடங்கள் எங்கும்
தொடரும் உன் நினைவுகள் ஏந்தி ,
உன்னையே எண்ணி
இன்னமும் நான் ...

என் இறுதி மூச்சின்
உஷ்ணமது தீரும்வரை
உன்னையே எண்ணி
இன்னமும் நான் ...

சனி, 5 நவம்பர், 2016

முத்தத் திலகம்

நெற்றிப்பொட்டில்  நீ ,
அழுத்திப் பதித்த 
அந்த முத்தம் போல 
சிறந்த திலகம் 
எனக்கு வேறேதுமில்லை ...

- சங்கீதா  செந்தில் 

ஞாயிறு, 2 அக்டோபர், 2016

மௌனம்

அவள்
அதிகம் பேசும் ,
நான்
மிகவும் ரசிக்கும்
மொழி
"மௌனம் "

சனி, 21 மே, 2016

நான்....



மகளின் தோழிகளுக்கு 
"ஆன்டி" ஆன பின்னும் ,
எங்கள் வீதிப்  
பிள்ளைகளுக்கு 
இன்னமும் 
அக்காவாய் 
"நான்" 

சனி, 12 மார்ச், 2016

நான் .....


தொலைந்துபோன சிறகுகள் தேடி
அலையும் சிட்டுக்குருவி நான் !...

முடியப்போகும் இருள்விளக்கின் 
விட்டில் பூச்சி நான் !.....

அர்த்தங்கள்    இல்லா, 
அட்டைக்குள் புதைந்த ,
அகராதியாய் நான் !....

நிமிடங்கள் நகரா 
கடிகாரம் நான் !....

வர்ணங்கள் இல்லா
வானவில் நான் !...

தென்றலை மறந்த 
ஜன்னல்கள் நான் !...

விடைகள் இல்லா 
விடுகதை நான் !....

முடிவே இல்லா கதையாய் நான் !...




LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...