பெண்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெண்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 13 மார்ச், 2025

ஏக்கம் கவிதை

 


ஏக்கங்களுக்கு 

எப்போதும் 

என் மீதான 

பிரியங்கள்  

அதிகம்… 

விருப்பப்பட்டியலில் நிறைந்து கிடக்கும், கனவுகளை ,

ஒரு வெற்றுப்பார்வை மட்டும் வீசி ,

மனத்திரையில் மட்டும் கண்டு,  ஏக்கங்களோடு கடந்துபோகும் 

மன நிலையை மறைக்க இரும்புத்திரை கொண்டு  தினம்தினம்  நடத்தும் போராட்டங்களை  என்னவென்று சொல்ல…

கனவுகள் கரங்களில் கிடைக்கும் காலம் வரை காத்திருக்கும் இந்த கனவுக்கண்கள்…



திங்கள், 10 மார்ச், 2025

தனிமையும் நானும்..



இந்த விரல்களுக்கிடையே ஒரு 

கவிதை ஒன்று கசங்கிக்கிடக்கிறது.. 


அதை வெளிப்படுத்த தினமும் திணறிக்கொண்டிருக்கிறது…


அது தன் எண்ணங்களை 

எல்லாம் கோலங்களாய் 

வடித்துக்கொண்டிருக்கிறது…


அவ்வப்போது , மேகவெளியில் 

மிதந்து நட்சத்திரங்களோடு 

கதைபேசிக்கொண்டிருக்கும்… 


தன்னைத்தானே தனிமை வயப்படுத்தி, ஆற்றாமையில் அவ்வப்போது அழுது கொண்டிருக்கும்…

தனக்கான தேடலை தொடர்ந்தபடியே… 

 

ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2017

அடுப்பங்கறை பிரம்மாக்கள்


அடுக்களைக்குள்
அழிந்துபோன
பிரம்மாக்களை
நீங்கள் என்றாவது அறிந்ததுண்டா?
கவிஞராய் ,நிபுணராய்,நாட்டியராய் ,ஓவியராய்,வீராங்கனையாய் ...
இன்னும் எத்தனையோ
சாதனைகள் படைக்கும்
பிரம்மாக்களை
இழந்து விட்டோமென
நீங்கள் வருந்தியதுண்டா?

கயல்விழியும் ,மெல்லிடையும்,கார்கூந்தலும்
அடையாளமென வகைப்படுத்தி விட்டீர்!
மறைக்கப்பட்ட எங்களின் அடையாளங்கள் இன்னும் எத்தனையோ?

உண்மையை உரக்கச் சொன்னால்,இங்கே
செவிசாய்க்க சிலர் இருப்பர் இதோ உங்களைப்போல !

கண்டுவைத்த
கனவுகளை எண்ணி ,
கசிந்துருகும்,
கன்னிகளைப்பற்றி
என்றாவது வியந்ததுண்டா?

என்னைப்போல,
ஆதங்கம் உங்களுக்கும்
இருக்குமென்றால்,
ஆதரியுங்கள்!
சில அடுப்பங்கரை
பிரம்மாக்களை......
-சங்கீதா செந்தில்

செவ்வாய், 3 பிப்ரவரி, 2015

தோழிக்கு ஒரு பிறந்த நாள் பரிசு....


பிப்ரவரி தந்த
பெண்ணிலவு
இவள் .....

என் உணர்வுகள் 
பகிர வந்த ,
பேசும் டைரி 
இவள் ....

என்னைத் தன்
பாதியாக எண்ணும்
பாசப் பறவை
இவள் ....

நிலவொளியில் 
தவழும் நதிநீர் 
இவள் ....

என்னைச் சிரிக்க 
வைக்கும் 
செந்தாமரை 
இவள் ....

நினைத்தால் இனிப்பாள் ...
நிஜத்தில் வருவாள் ...
பேசாத வார்த்தைகள் 
புரிந்து செயலால் 
சிலிர்க்கச் செய்வாள் ....

உன் பிறந்த நாள் 
பரிசாக ,என்னிடம் 
உனக்கான இந்த 
கவிதையும் ,
என் ஆயிரம் முத்தங்களும் .....




வெள்ளி, 31 அக்டோபர், 2014

மணப்பெண்ணின் சொல்ல இயலா சோகங்கள் ...




அறையில் சிதறிய புத்தகங்களும் ,
அம்மாவின் அர்ச்சனைகளும் ,

அதுவரை செல்லாத  சமையலறையும் ,
அம்மாவின் கைப்பக்குவமும் ,


வீதிமுனைப் பிள்ளையாரின்
பிரார்த்தனை பெட்டிஷன்களும்,


பரிசாய்ப் பெற்ற பதக்கங்களும் ,
பால்கனிப் பூக்களும் ,

செல்ல நாயின் சிணுங்கள்களும் ,
சிறுவயது கிறுக்கல்கள் சுமந்த சுவர்களும் ,

எல்லாம் சேர்ந்து  ,
இதயம் பிளந்து ,
கண்ணீர்  உதிர்த்து ,
பாரம் சுமந்து ,

புன்னகை போர்த்தி
புகுந்த வீடு
நுழைகிறாள்
புதுப்பெண்ணாக  ...


சனி, 23 ஆகஸ்ட், 2014

அன்பே ... அன்பே...



மெல்லச் சொட்டும் 
மழைத்துளியை 
கையில் ஏந்தி ,
பொத்திக் கொள்வேன் ....
அதை 
என் முத்தம் தேடும் ,
உன் தேகக்கீற்றில் 
உரசச் செய்வேன் .....

மிதந்து செல்லும் 
மேகம் திரட்டி ,
மேனியெங்கும் 
உருட்டி விடுவேன் .....

என் வெட்கமெல்லாம் 
மூட்டைகட்டி 
ஆற்றில் விடுவேன் ....
அதை 
அப்பப்போ அள்ளிப்பருகி ,
கன்னம் சிவப்பேன் ....

உன் பெயரைச்சுமந்த 
கவிதைகளை 
காற்றில் ,
பறக்கச் செய்வேன் ....
அதை 
சுவாசித்து சுவாசித்தே 
மூச்சடைத்துப்போவேன் ...

அன்பே ,
உனக்கே உனக்காய் 
சேர்த்து வைத்த 
ஆசையெல்லாம் ,
கருகிப் போனதே ....
என் 
காதல் கீதம் 
ஏனோ இன்று 
சோக கீதம் ஆனதே ...
கலைந்து போனதே ....
கனவாய் ஆனதே....
அன்பே ...
மீண்டும் வா ....
என்னை மீட்க வா ....

வெள்ளி, 17 ஜனவரி, 2014

எங்களின் (பெண்களின் ) நட்பு

அன்றொருநாள்
அவளைக்
கண்டேன் ...

பள்ளிகூட
தோழியவள்...
பாசமிகு
பாவையவள் ...

கண்ட நொடி
கண்களில்
மிளிர்ந்தன
மின்னல்கள் ....

சிலநொடி
சிரிப்புகள் ...
பலநொடி
ஏக்கங்கள் ...

கலைந்து விட்ட
கனவுகள் ..

கிழிந்து விட்ட
கடிதங்கள் ...

மறந்து விட்ட
நினைவுகள் ...

மீண்டும்
முளைத்தன ...
முன்னே வந்து
சிரித்தன ...

அடடா ...
அதெல்லாம்
சில நொடி !
அழைப்புமணி
ஒலித்து
அலைபேசி அழைக்க ...

அச்சச்சோ !
நேரமாச்சு...
பதைத்தன கொஞ்சம்  ..
துடித்தது நெஞ்சம் ...

கடைசியில் கடக்கையில் ,
திரும்பினோம்
இருவரும் ...
கண்ணீரில் கனத்த
கண்களுடன் ...

பெண்களின் நட்பில்
பரிதாபம்தான்
என்றும்
மிச்சம் ...


நினைவுகள் ...


உனக்கு 
பிடித்த
பாடலொன்று 
காற்றலையில் 
தவழ்ந்து செல்ல 
என் 
நினைவெல்லாம் 
நீ .....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...