சனி, 15 நவம்பர், 2014

கிராமத்து மீன் குழம்பு

இந்த மழை காலத்தில் மீன் குழம்பு மிக பொருத்தமான உணவு .. அதை மண்சட்டியில் சமைப்பது இன்னும் சுவை சேர்க்கும் ..எங்கள் அம்மாவின் மீன் குழம்பு அருமையாக இருக்கும் . அதே முறையில் செய்ததுதான் இந்த ரெசிபி 



தேவையான பொருட்கள் :

மீன் - 1/2 கி 
சின்ன வெங்காயம் - 8
தக்காளி - 1(பெரியது )
புளி - எலுமிச்சை அளவு
குழம்பு மிளகாய்த்தூள் - 4 ஸ்பூன் (காரம் உங்கள் விருப்பம் )
விளக்கெண்ணெய் - தாளிக்க 
வெங்காய வடகம் - 1/2 ஸ்பூன் 
சீரகத்தூள் - 1 ஸ்பூன் 
உப்பு - தேவைக்கு 

செய்முறை :

  • மீனை நன்கு சுத்தம் செய்து , மஞ்சள் தூள் ,உப்பு சேர்த்து நன்கு கிளறி , அலசி விடவும் .(இதுபோல் செய்வதால் அதன் வாடை குறையும் )
  • அலசிய மீனை தண்ணீர் வடித்து தனியாக வைக்கவும் .
  • வெங்காயத்தை தட்டி வைக்கவும் (அ ) நறுக்கி வைக்கவும் .(அம்மி இருப்பவர்கள் சீரகத்தை அம்மியில் பொடித்து ,அதை எடுக்கும் போது , வெங்காயத்தையும் அம்மியில் வைத்து தட்டிக் கொள்ளவும் .
  • தக்காளியும் நறுக்கிக் கொள்ளவும் .
  • ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் வைத்து அதில் புளியை ஊறவிடவும் .
  • ஊறிய புளியை நன்கு  சாறு பிழிந்து கொள்ளவும் .அதனுடன் மிளகாய்த்தூள் , மஞ்சள்தூள் ,உப்பு  சேர்த்து சரிபார்த்துக்கொள்ளவும் .காரம் ,உப்பு குறைவாக இருந்தால் சேர்த்துக்கொள்ளவும் .
  • பின் மண் சட்டியில் விளக்கெண்ணை விட்டு (குழம்பினால் வரும் சேர்ப்பதால் சூட்டை குறைக்கும் . ) வெங்காய வடகம் , வெங்காயம் , சீரக தூள் , சேர்த்து வதக்கவும் . இதனுடன் தக்காளியும் சேர்த்து நன்கு வதக்கவும் .
  • இதனுடன் புளிகலவையை விட்டு ,நன்கு கொதிக்க விடவும் . சிறிது நேரத்தில் குழம்பு சிறிது கெட்டியாகி வரும் . அப்போது நறுக்கிய மீன் துண்டுகளை சேர்க்கவும் . 
  • மீன் துண்டுகள் சேர்த்த பின் குழம்பு நீர்க்கும் .எனவே குழம்பு சிறிது கெட்டியான பிறகே மீன் துண்டுகள் போட்டு வேக விடவும்  . அவ்வளவுதான் சுவையான ,மணமான ,நாவூறும் மீன் குழம்பு தயார் .
  • வெங்காய வடகம் இல்லாதவர்கள் அதற்கு பதிலாக வெந்தயம் ,பொடியாக நறுக்கிய வெங்காயம் ,கருவேப்பிலை சேர்த்துக்கொள்ளவும்.
  • மீன் துண்டுகள்  சேர்த்த பின் குழம்பை அதிகம் கிளற கூடாது . மீன் உடைந்து விடும் . எனவே சட்டியை பிடித்து குழம்பை பரவலாகும் படி அசைத்து விடலாம் .(அ ) மிக லேசாக கிளறவும் .
  • மீன் குழம்பு பொதுவாக அடுத்த நாள் சாப்பிட்டால் சுவையாக இருக்கும் .
  • மீன் குழம்பு சாதத்திற்கு மட்டும் இல்லாமல் ,இட்லி , தோசை ,பழைய சாதத்திற்கும் நன்றாக இருக்கும் .

4 கருத்துகள்:

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...